ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம்(4) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் அறிவித்தபடி இலங்கை அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு உலக வங்கி தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஐயர், இலங்கையில் உலக வங்கியின் ஆதரவுடன் நடைபெற்று வரும் அனைத்து திட்டங்களும் தடையின்றி தொடரும் என்று உறுதியளித்தார்.
ஜனாதிபதி தனது நிர்வாகத்தின் எதிர்கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை (கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள், பொருளாதார டிஜிட்டல் மயமாக்கலுக்கான திட்டங்கள், டிஜிட்டல் அடையாள அட்டை முயற்சியால் முன்னிலைப்படுத்தப்பட்ட முக்கிய விவாதங்கள்) கோடிட்டுக்காட்டுவதற்கான வாய்ப்பையும் இந்த சந்திப்பு வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட மக்களைப் பாதிக்கும் காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தி வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால சவால்களுக்கு தீர்வு காண்பது தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, கல்வி, மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை முன்னேற்றுவது உள்ளிட்ட அரசாங்கத்தின் முதன்மையான கவனம் குறித்த விடயங்களை ஜனாதிபதி திஸாநாயக்க வலியுறுத்தினார்.
தேசிய வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் இந்தத் துறைகளின் முக்கியத்துவத்தை அவர் எடுத்து கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அதற்கு பதிலளித்த ஐயர், அரசாங்கத்தின் வளர்ச்சி முன்னுரிமைகளை ஆதரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஆராய்வதற்காக உலக வங்கி ஆலோசனைக் குழுவைக் கூட்டத் தயாராக இருப்பதாகக் கூறியதுடன் ஜனாதிபதியின் “சுத்தமான இலங்கை” திட்டத்தையும் அவர் பாராட்டினார்.
இக்கூட்டத்தில், தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.