விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபா பூரண இழப்பீடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விவசாயிகள் தமது நிலத்தை பயிர்ச்செய்கைக்கு தயார்படுத்துவதற்கு உள்ளுராட்சி மன்றங்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“பேரழிவினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் அளவு மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது மதிப்பிடப்பட்டு வருகிறது. அதன்படி, விவசாயிகளுக்கு முழு இழப்பீடு தொகையாக சேதமடைந்த விவசாய நிலத்திற்கு ஹெக்டேருக்கு ரூபாய்100000 என்ற வகையில் அந்தக் கடமையையும் பொறுப்பையும் நிறைவேற்றுவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
நெல் வயல்களில் ஒன்றரை அடி முதல் இரண்டு அடி உயரம் வரை மணல் அடுக்கு காணப்படுவதாகவும், வயல்களை துப்பரவு செய்வதற்கு இயந்திரங்கள் தேவைப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பல்வேறு அரச நிறுவனங்களுடன் இணைந்து விவசாய நிலங்களை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் நாமல் கருணாரத்ன மேலும் தெரிவித்தார்.
புரிந்துணர்வுடன் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும், விவசாய நிலத்தை தயார்படுத்தும் போது நடைமுறையில் உள்ள சுற்றறிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.