மஹிந்தவின் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்குமா

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அலரிமாளிகையில் இடம்பெறும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அதன் தலைவர்கள்   தெரிவித்துள்ளனர்.

“திங்களன்று நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடுகளைப் பிரதமரிடம் நாம் எடுத்துரைப்போம்” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்திருந்திருந்தார்.

இந்தநிலையிலேயே   தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தன. அது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை அலரிமாளிகைக்கு வருமாறு அழைத்திருந்தார்.

இந்த அழைப்பு கூட்டமைப்புக்கும் கிடைத்திருப்பதாகவும், அதில் கலந்து கொள்வோம் என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

ஆனால் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணிக் கூட்டில் உள்ளவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதா? இல்லையா? என்று முடிவு எடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர்   தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir