வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் வாகனப் பற்றரிகளைத் தொடர்ச்சியாகத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாகனத் தரிப்பிடத்தில் வாகனப் பற்றரிகள் களவாடப்பட்டுள்ளன, என்று நெளுக்குளம் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய நெளுக்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே. திவுல்வெவவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இரகசிய விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது நான்கு வாகனப் பற்றரிகளுடன் இரண்டு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த குற்றச்செயலுக்குப் பயன்படுத்தபட்டது எனச் சந்தேகிக்கப்படும் ஓட்டோ ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்கள் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்று நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.