உலகையை அதிர்ச்சியில் உறைய வைத்த வெடிவிபத்து நடந்த பெய்ரூட் துறைமுகம், லெபனான் அதிபரின் அதிகாரத்துக்கே கட்டுப்படாத பகுதி என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
ஊழல் தலைவிரித்தாடும் இந்த துறைமுகம், லெபானின் ‘அலிபாபா குகை’ என்றே அழைக்கப்படுகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 4ம் திகதி மாலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
துறைமுக கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் திடீரென வெடித்ததால், அண்ைட நாடான சைப்ரஸ் வரை அதிர்ந்தது.
இந்த விபத்தில் இதுவரை 155 பேர் பலியாகி இருக்கின்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பலர் காணவில்லை. இந்த வெடிவிபத்தால் பெய்ரூட் நகர கட்டிடங்கள் சிதிலமாகி விட்டன. இதனால், பல லட்சம் மக்கள் இடிந்த கட்டிடங்களில் வவ்வால்கள் போல் வாழ்க்கை நடத்துகின்றனர்.
ஏற்கனவே, கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் லெபனான், தற்போதைய சீரழிவில் இருந்து மீள்வதற்கு பல ஆண்டுகளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெய்ரூட் துறைமுகம் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லஞ்சம் தலைவிரித்தாடும் இது, தனிக்காட்டு ராஜாவாக இருந்து வருகிறது. இங்கு பணியாற்றும் துறைமுக அதிகாரிகள், சுங்க அதிகாரிகள் தங்களில் வசூல் வேட்டையால், நாட்டின் மேல்மட்ட அதிகாரம் வரையில் கப்பம் கட்டி வந்துள்ளனர். லஞ்ச லாவண்யத்தால் கொழுத்துள்ள இந்த துறைமுகத்தை லெபானின் ‘அலிபாபா குகை’ என்ற அடைமொழியுடன் தான் அழைக்கின்றனர்.
இந்த துறைமுகத்தின் இந்த தனிக்காட்டு ராஜா செயல்பாடு, பெய்ரூட்டில் இந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன் அளித்த பேட்டியின் மூலம் உறுதியாகி இருக்கிறது.