கேகாலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 33 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பொறள்ளை பிரதேசத்தில் வைத்து நேற்று புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக பொறள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
பொறள்ளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சந்தேக நபரிடமிருந்து 15 ஆயிரம் ரூபா பணம், தங்க மோதிரம் , தங்க வளையல்கள் , தங்க மாலை , கையடக்கத் தொலைபேசிகள் , மடிக்கணினி மற்றும் பல்வேறு தங்க நகைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த 14 ஆம் திகதி கேகாலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 33 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொறள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.