பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “மிதிகம ருவன்” என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது, “மிதிகம ருவன்” சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, மிதிகம ருவனை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், மிதிகம ருவனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
“மிதிகம ருவன்” என்பவர் பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “ஹரக் கட்டா”வின் உறவினர் ஒருவர் ஆவார்.
இவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதுடன் “ஹரக் கட்டா” குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு உதவி செய்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
மிதிகம ருவன் என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த மே மாதம் 31 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.