பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கிசெல் பெலிகாட்டின் பாலியல் வன்புணர்வு வழக்கில் ஏவிக்னான் நீதிமன்றம் இன்று, டிசம்பர் 19, தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 4 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெலிகாட்டின் கணவரான டொமினிக் பெலிகாட் இந்தக் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிடுகிறது.
கிசெல் பெலிகாட்டை பாலியல் வன்புணர்வு செய்யததாக குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களுக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒட்டுமொத்தமாக சிறைத்தண்டனை 600 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம்.
இளைஞர்கள், முதியவர்கள், உடல் பருமனானவர்கள், ஒல்லியானவர்கள், கருப்பின மற்றும் வெள்ளையினத்தவர்கள் என பலரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களுள் தீயணைப்பு வீரர்கள், லாரி ஓட்டுநர்கள், ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர், பத்திரிகையாளர் மற்றும் டி.ஜே ஆகியோரும் அடங்குவர்.
72 வயதான, அவருடைய கணவரான டொமினிக் பெலிகாட்டின் உத்தரவின் பேரில், கிசெல் பெலிகாட்டை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 50 ஆண்கள் இவர்கள். டொமினிக், தன் மனைவி கிசெலுக்கு சுமார் 10 ஆண்டுகள் தூக்க மாத்திரைகளை வழங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.