அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடான பாகிஸ்தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது என்றும், அது தெற்காசியாவைத் தாண்டி அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணை என்றும் அமெரிக்க அதிபர் அலுவலகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு காலத்தில் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த அமெரிக்கா தற்போது பாகிஸ்தானின் ஏவுகணை திட்டம் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
இந்த பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் நோக்கம் என்ன, பாகிஸ்தான் இதனை வைத்து என்ன செய்ய திட்டமிடுகிறது என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ளது என்று அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபின்னர் கூறுகிறார்.
“பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு வளர்ந்து வரும் ஒரு அச்சுறுத்தலாக மட்டுமே இருக்கும் என்பதைத் தவிர வேறு எந்த வழியிலும் இதை பார்க்க முடியாது” என்று கானகி எண்டவ்மேன்ட் பார் இண்டர்நேஷ்னல் பீஸ் எனும் சிந்தனைக்குழு கூட்டத்தில் ஜான் ஃபின்னர் கூறினார்.