ஜா-எல பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இன்று(24) அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூட்டினால் வீட்டின் நுழைவாயில், சுவர் மற்றும் அருகிலுள்ள 2 வீடுகளின் மதில் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி சுமார் 40 தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் பட்டுவத்தே சாமர என்பவரின் உறவினரின் வீட்டை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கு முன்னரும் கடந்த 15ஆம் திகதி இரவு குறித்த வீட்டை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.