இராணுவ மயப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. எனவே மாவட்டம் தோறும் செயலணி உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.
நேற்று அவரது வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவ மயப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தடம் மாறி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. சுகாதார மயப்படுத்தப்பட்ட இராணுவத்தினருடன் ஒன்றிணைந்த ஒரு செயலணி உருவாக்கப்பட வேண்டும். அதுவும் மாவட்டத்திற்கு மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
மாவட்டத்தில் உருவாக்கப்படும் செயலணியில் அந்த மாவட்ட அரச அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் தலைமைகளில் உருவாக்கப்பட வேண்டும்.
அதுவும் மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதாரத்திற்குரிய, வியாபாரத்திற்குரிய சகல துறைகளுக்கும் உரிய தலைவர்கள் அழைக்கப்பட்டு ஒரு மாவட்டத்திற்குரிய செயலணி அமைப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது. அதனை உடனடியாக செய்ய வேண்டும்.
இந்த மாவட்ட செயலணி என்ன செய்ய வேண்டும் என்பதை கலந்துரையாட வேண்டும். தற்போது மாவட்டம் தோறும் கொரோனா தடுப்புக்காக ஒரு வைத்தியசாலையை தெரிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
எனவே அந்த வைத்தியசாலை நோய் நிலையம் பற்றி கலந்துரையாட வேண்டிய தேவை இருக்கிறது. பாதுகாப்பு உபகரணங்களின் தேவை குறித்து கலந்துரையாட வேண்டி இருக்கிறது.