பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கூட்டமைப்பில் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது.
ஆனால் நான் நிச்சயமாக பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா என நேற்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யார் கலந்து கொள்கிறார்கள். யார் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் நிச்சயமாக பிரதமர் மஹிந்த தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வேன்.
தற்போது கொவிட் 19 இன் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வடமாகாணத்தில் கொவிட் 19 இன் தாக்கம் குறைவாக இருந்தாலும், பங்குனி மாதம் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலமே தொற்று பரவியுள்ளது.
விமான நிலையத்தை முன்னரே மூடி இலங்கையை தனிமைப்படுத்தியிருந்தால் இதனை தடுத்திருக்கலாம். அதைவிடுத்து தற்போது வெளி மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்களை வடமாகாணத்தில் கொண்டு வந்து தனிமைப்படுத்துவது பிழையான விடயம்.
அதனை அந்தந்த மாகாணத்தில் செய்ய வேண்டும். அதை விட பாடசாலைகளை படைத்தரப்பு தனிமைப்படுத்துவதற்கும், விடுமுறையில் சென்ற பாதுகாப்பு தரப்பினரை தனிமைப்படுத்துவதற்கும், சுகாதார துறையினரின் ஆலோசனை இல்லாமல், இராணுவ முகாம்களுக்கு அருகில் இருக்கும் பாடசாலைகளை இராணுவம் பெறுவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்மந்தமாக கதைக்க வேண்டியுள்ளது. திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இதனை கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தால் கதைப்பேன். அதனைக் கதைப்பதற்காக அக் கூட்டத்தில் கலந்து கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.