ஜூன் 20 தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

“நீதிமன்றம் ஊடாகத் தடையுத்தரவு ஏதாவது பிறப்பிக்கப்பட்டால் மாத்திரமே, ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடைபெறாது. தடையுத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாவிட்டால், ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடைபெறும். அதற்குரிய வகையில் தேர்தல் பணிகளை முன்னெடுக்கவேண்டும்.”

– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கட்சிச் செயலர்களுக்கும் இடையிலான சந்திப்பு தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு கலந்து கொண்ட கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டன. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மாத்திரம் எதிர்க்கவில்லை.

இந்தநிலையில் நேற்று மாலை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, ஆணைக்குழு உறுப்பினர்களான அபயசேகர, பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது.

ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவது என்றும், அதற்குரிய வகையில் தேர்தல் பணிகளை ஆரம்பிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் நாளை வழங்கப்பட இருந்தது. இருப்பினும் அதனை நாளை வழங்க முடியாமல் இருப்பதாக காலையில் இடம்பெற்ற கூட்டத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார். ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றால் அதற்கு 35 நாள்கள் முன்னதாக அதாவது மே 15 ஆம் திகதியளவில் விருப்பு இலக்கங்களை வழங்கினால் போதும் என்று நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுவிடுமுறை தினத்தில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டமை உள்ளிட்ட அரசமைப்பு மீறல் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஏதாவது தரப்புக்கள் நீதிமன்றத்தை நாடினால், நீதிமன்றம் கட்டளையாக்கினால் மாத்திரமே தேர்தல் ஒத்திவைக்கப்படும் எனவும், இல்லாவிடின் ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir