பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்றனர். இந்தச் சந்திப்புக்கு முன்னர் இதில் கலந்துகொள்வதற்கான காரணத்தை விளக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தழிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் பெயரில் வெளியிடப்பட்டிருந்த கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி தழிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏனைய அரசியல் கட்சிகளினாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வேண்டுகோளொன்று விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கான பதில் இதுவரை எதிர்மறையானதாகவே இருந்து வருகின்றது.
இப்பின்னணியில், பிரதம மஹிந்த ராஜபக்ச கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் இன்று அலரி மாளிகையில் கூட்டமொன்றுக்கு அழைத்துள்ளார்.
பின்வரும் காரணிகளின் காரணமாக நாடும் மக்களும் மிகவும் நெருக்கடியான நிலைமையில் உள்ளனர்: உலகளாவிய கொள்ளை நோய் – கொரோனா வைரஸ் படிப்படியாக மோசமடைந்து வருகின்றது. எமது நாட்டிலிருந்து அதனை முழுமையாக ஒழிப்பதற்கு இன்னும் அதிகமான வேலைகள் செய்யப்படவேண்டும். பாரதூரமான விளைவுகளோடு அது மேலும் மோசமடையும் என்ற நியாயமானதோர் அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இது தொடர்பாக நாட்டின் ஒன்றிணைந்த முயற்சிகள் தேவை.
1994ஆம் ஆண்டிலிருந்து கடந்த 25 ஆண்டுகளாக ஐந்து நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதிப் பதவிக் காலங்களில் நடைபெற்ற அனைத்துத் தேசிய தேர்தல்களிலும் மக்கள் தமது இறைமையை – தமது வாக்குரிமையைப் பிரயோகித்து 1978 ஆம் ஆண்டு அரசமைப்பை நிராகரித்துள்ளதோடு, அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை ஆகிய தமது இறைமையின் – ஆட்சி அதிகாரங்களின் – மூன்று அம்சங்களையும் – சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித் துறை அதிகாரங்கள் உள்ளடக்கி புதிய அரசமைப்பொன்றை நிறைவேற்றுவதற்கான ஆணையை வழங்கியுள்ளனர். தமது இறைமையைப் பிரயோகித்து மக்கள் வழங்கிய இவ்வாணை நிறைவேற்றப்படாததோடு, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் ஓர் அரசமைப்பின் கீழேயே நாடு தொடர்ந்து ஆளப்படுகின்றது.
2015ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் பிரதானமாக மூன்று விடயங்களைக் கையாண்டு – அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, நாடாளுமன்றத்துக்கான தேர்தல் சீர்திருத்தங்கள், தேசிய பிரச்சினையான தமிழர் பிரச்சினை – ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளல் ஆகியவற்றைக் கையாண்டு புதிய அரசமைப்பொன்றைத் தயாரிப்பதற்கு ஒரு வழிநடத்தல் குழு மற்றும் பல்வேறு விடயங்களுக்குப் பொறுப்பான உப குழுக்கள் மற்றும் ஒரு வல்லுநர் குழு ஆகியவற்றோடு அரசமைப்புச் சபை என்ற பெயரில் தன்னை ஒரு முழு நாடாளுமன்றக் குழுவாக மாற்றுவதற்கு ஒருமனதாகத் தீர்மானித்தது.
ஸ்தாபிக்கப்பட்ட பல குழுக்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவம் வகித்தன. அங்கு பெருமளவு கருத்தொருமைப்பாடு நிலவியது; குழுக்களின் அறிக்கைகள் அரசமைப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்படும்வரை இந்த நடைமுறை தடைப்பட்டபோது, அது இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது.
அரசமைப்புக்கான 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் தேசிய பிரச்சினையானது, அனைத்து அரசியல் கட்சிகளினாலும் 1991ஆம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகளினாலும் கையாளப்பட்டு வந்துள்ளது; அதில் பெருமளவு முன்னேற்றங்கள் அடையப்பட்டுள்ளன.
இப்பிரச்சினை எவ்வாறு கையாளப்பட்டு ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு வழியில் எவ்வாறு தீர்த்து வைக்கப்படும் என்பது தொடர்பாக நாட்டுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் பகிரங்க வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய வாக்குறுதிகளின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டது.
தேசிய சமாதானத்தின் நலனுக்காகவும், பிராந்திய அமைதியின் நலனுக்காகவும் உலக சமாதானத்தின் நலனுக்காகவும் இவ்வாக்குறுதிகள் காப்பற்றப்படவேண்டும். இல்லையேல், பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்களுக்குத் துரோகமிழைப்பதற்காக சர்வதேசச் சமூகமும் ஏமாற்றப்பட்டதாகவே தோன்றும்.
மேலே விபரிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படவேண்டும் என்பதனாலும், நாட்டின் நலனுக்காகவும் அதன் மக்களின் நலனுக்காகவும் இவ்விடயங்கள் அனைத்தையும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான ஒரு முறையில் தீர்த்து வைப்பதற்கு எமது ஆதரவை வழங்க நாம் தயாராக உள்ளோம் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதற்காகவும் பிரதமருடனான இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
எனினும், நீங்கள் அழைப்பு விடுத்திருக்கும் இக்கூட்டம் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான ஒரு மாற்றீடாக அமையாது, அமையவும் முடியாது என்பதை நாம் அழுத்தம் திருத்தமாக அறிவிக்க விரும்புகின்றோம். எமது கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தற்போது தோன்றியுள்ள பல அரசமைப்பு மற்றும் சட்டப் பிரச்சினைகளைக் கையாளுவதற்காக நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தால் மட்டுமே அவற்றைக் கையாள முடியும் என்றும் நாம் உறுதியான கருத்தைக் கொண்டிருக்கின்றோம்” – என்றுள்ளது.