21 நாட்களுக்கு பின் மீண்டும் வந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இன்று அங்கு தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் முன்னிலையில் பேசினார்.
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் 21 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் மக்கள் முன்னிலையில் தோன்றினார். அவரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில் இன்று அவர் மக்கள் முன்னிலையில் தோன்றினார். வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்து இருக்கிறார்.
பியாங்யாங் நகரத்தில் இருக்கும் சன்சோன் போஸ்பாடிக் உர தொழிற்சாலையை திறப்பதற்காக அவர் வந்தார். அங்கிருக்கும் அதிகாரிகளுடன் சில நிமிடம் அவர் உரையாடினார். பின் ரிப்பனை வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிலையில் கிம் உன் குறித்து காலையில் புகைப்படங்கள் மட்டும் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வீடியோவும் வெளியாகி உள்ளது. காலையில் புகைப்படங்கள் வெளியான போது, பலரும் அந்த புகைப்படங்கள் குறித்து சந்தேகம் எழுப்பினார்கள்.
அந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதை பழைய புகைப்படங்கள் என்று கூறினார்கள். அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ கிம் மிகவும் ஆரோக்கியமாக காணப்படுகிறார் .. மிகவும் உறுதியாக திடமாக அதே சமயம் வேகமாக வீறுநடை போட்டு கிம் நடந்து வருகிறார்.
கிம்மை அங்கு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பதும். கிம் முகம் முழுக்க சிரிப்புடன் மக்களுடன் பேசுவதும் பெரிய வைரலாகி உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கிம் என்ன பேசினார் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில், இந்த உர தொழிற்சாலை வடகொரியாவின் வளர்ச்சியில் பெரிய பங்கு வகிக்கும்.
வடகொரியா வரலாற்றில் இந்த தொழிற்சாலை முக்கிய மைல் கல்லாக இருக்கும். நாம் புதிய நாட்களை சந்திக்க இருக்கிறோம்.
நம்முடைய பொருளாதார பலத்தை பறைசாற்றும் புரட்சிகரமான இடமாக இது இருக்க போகிறோம்.
நம் நாட்டின் சாதனைகளில் ஒன்றாகவும், அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இது இருக்கும். எனக்கு இங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பெரிய வரவேற்புக்கு நன்றி.
இங்கே பணியாற்றிய எல்லோருக்கும் நன்றிகள். இந்த பணியாளர்கள் எல்லோருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு இங்கு வந்த பின்தான் திருப்தியாக இருக்கிறது.
இங்கே பல இளைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். நாம் இது போன்ற இளைஞர்களுக்கு வழி விட வேண்டும், என்று கிம் கூறியுள்ளார். ஆனால் தான் 21 நாட்களாக தலைமறைவானது குறித்தும், எங்கே சென்றார் என்பது குறித்தும் கிம் எதுவும் பேசவில்லை.