ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு? என்பது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது?
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
ஏனைய மாவட்டங்களில் இன்று (04) முதல் மே 06, புதன் வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும். இம்மாவட்டங்களில் மே 06 புதன், இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 11 திங்கள் அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.
02.ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் வழமை நிலைக்கு கொண்டுவருதல் எப்போது ஆரம்பமாகும்?
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருதல் மே 11 திங்கள் முதல் ஆரம்பமாகும்.
இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று (04) முதல் ஆரம்பிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும், இவ்வாரத்தில் 04 வார விடுமுறை நாட்கள் உள்ளதால் மே 11க்கு மாற்றப்பட்டுள்ளது.
03.இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவரும் ஆரம்ப பணிகள் எவ்வாறு இடம்பெறும்?
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரச, தனியார் துறை நிறுவனங்கள் மே 11 திங்கள் முதல் திறந்திருக்க வேண்டும். இதற்காக தற்போது முதல் திட்டமிடுமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.