ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமை மற்றும் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல்களை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தமை ஆகியவற்றை எதிர்த்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
“அரசமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி எட்டாவது நாடாளுமன்றத்தைக் கலைத்ததுடன், ஏப்ரல் 25 ஆம் திகதி 9ஆவது நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தலை நடத்துவதற்கான தினமாகவும் அறிவிக்கப்பட்டது.
இது உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த நிலையிலேயே இடம்பெற்றது. இதனால் தேர்தல் பிற்போடப்பட்டாலும், எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது.
எனினும், அதற்கு முன்னர் தேர்தல் திகதி குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நடைமுறையில் இருக்கையில், புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியாது.
அதுமாத்திரமன்றி தற்போதைய நெருக்கடி நிலையில் நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தலொன்றை நடத்துவது சாத்தியமற்றதாகும்.
தேர்தல் பரப்புரை, வாக்களிப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் சமூக இடைவெளியைப் பேணுவது கடினம் என்பதுடன், இது மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமையலாம். எனவே, ஜூன் 20ஆம் திகதிக்குப் பின்னரும் தேர்தலைப் பிற்போட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
இந்தநிலையில், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமை மற்றும் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல்களை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தமை ஆகியவற்றை எதிர்த்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” – என்றுள்ளது.
இதேவேளை, பிரபல ஊடகவியலாளர் விக்டர் ஐவனுடன் ஏழு பேர் சேர்ந்தும், பிறிதொரு தரப்பினராலும் இதேபோன்ற இரு வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டன
இதே போன்ற ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நாளை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மனுக்கள் அடுத்த வாரம் நடுப் பகுதியில் உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.