தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் என்பவற்றை, உரிய சான்றிதழ் பெற்றதன் பின்னரே திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
இதன்படி, அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்களைத் திறக்கும் பொருட்டு, விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ள வழிகாட்டில் அறிவுறுத்தல்களுடன் கூடிய சான்றிதழைப் பெற்ற பின்னரே அவற்றை திறக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்றைய தினம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைளத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் காரணமாக, அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிறுவனங்களை நடத்திச் செல்பவர்கள் மத்தியில் தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றினால் மாத்திரமே அவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான வழிகாட்டில் அறிவுறுத்தல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் விரைவில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், குறித்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டதன் பின்னர், அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார உரிமையாளர்கள், தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியிடம் குறித்த அறிவுறுத்தல்களைப் பெற்று, தமது நிலையங்களை அதற்கு ஏற்றவாறு தயார்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர், அவற்றை கண்காணிப்பதற்காக உரிய பிரதேசத்திற்கான பதில் பொது சுகாதார வைத்திய அதிகாரி வருகை தருவார் எனவும், பின்னர் குறித்த நிலையம் தொடர்பான பரிந்துரைகள் சுகாதார வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழங்கப்படுகின்ற பரிந்துரைகளின் பின்னர், உரிய அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்களுக்கு அனுமதிச் சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.