அனைத்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்குமான ஓய்வூதிய கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெசாக் போயா தினம் மற்றும் வார இறுதி விடுமுறை ஆகியன எதிர்வரும் நாட்களில் காணப்படுவதன் காரணமாக மே மாதத்துக்கான ஓய்வூதியக் கொடுப்பனவை முன்கூட்டியே வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மே மாதத்துக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளை நேற்றும் இன்றும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், ஏப்ரல் மாதத்துக்கான ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள, ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் வழங்கிய சலுகைகள் இந்த மாதமும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், கிராம உத்தியோகத்தர்கள், முப்படையினர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையினர் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இதன்மூலம், அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வசிக்கும் ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளுக்கு செல்லவும், தேவையான மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக மருந்தகங்களுக்கு செல்லவும், வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆயுர்வேத வைத்திய நிலையங்களுக்கு செல்லவும் அவசியமான போக்குவரத்து வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட உள்ளன.
இதேவேளை, குறித்த ஓய்வூதியக் கொடுப்பனவை வெசாக் போயா தினத்துக்கு முன்னதாக வழங்கி நிறைவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்றைய தினம் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்காக பயணித்த அனைவருக்கும் தேவையான சலுகைகைளையும் உதவிகளையும் முப்படையினரும் பெற்றுக் கொடுத்துள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
மேலும், இன்றைய தினமும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.