பொதுத்தேர்தலுக்கான திகதி குறித்து தற்போதைக்குத் தீர்மானிக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கவும் நாட்கள் செல்லும். ஆனால், ஜுன் மாதம் 2ஆம் திகதியுடன் தேர்தலுக்கான ஜனாதிபதியின் வர்த்தமானி காலாவதியாகின்றது. எனவே, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரும்பாமையினால் நீதிமன்றமே உரிய தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்.” என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதாரம் குறித்து திட்டமொன்றை வகுக்குமாறு அரசுக்கு ஆலோசணை வழங்கினேன். அவ்வாறு இல்லாது நாட்டை அபிவிருத்திப் பாதையை நோக்கிக் கொண்டுச் செல்ல முடியாது.
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பலதுறைசார் வீழ்ச்சிகள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி புள்ளியிலேயே உள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்புகின்றனர்.
அவர்கள் மூலம் கிடைக்கப் பெற்ற அந்நிய செலாவணி இனி கிடைக்கப்போவதில்லை. மறுபுறம் அவர்களுக்கு உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உள்நாட்டிலும் பல நிறுவனங்கள் தொழிலாளர்களைக் குறைத்து வருகின்றது.
ஆகவே, பாரியதொரு சவால் நாட்டின் முன்னுள்ளது. உரிய திட்டமொன்றை வகுக்காது முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதை அரசுக்குத் தெளிவுபடுத்தியுள்ளேன்.
தேர்தலுக்காகத் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னரே கட்சி என்ற வகையில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். பாரிய கூட்டங்களை நடத்த இயலாது. ஆனால், மக்களுக்குத் தகவல்களைக் கொண்டு செல்ல புதிய முறைகளைக் கையாள வேண்டும்.
கொரோனா வைரஸ் பிரச்சினை முடிந்துவிட்டதாக அரசு காண்பிக்க முற்பட்டாலும் சுகாதாரத்துறை உறுதியாகக் கூறவில்லை.
எனவே, தேர்தல் எப்போது என்பதை தற்போது கூற இயலாது. உயர்நீதிமன்ற வழக்குகள் முடியும் வரை காத்திருக்க வேண்டும். வழக்கு முடிவடைந்த பின்னர் 35 நாட்கள் தருவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது.
இராணுவ வெற்றி நிகழ்வு ஒத்திகைளில் கலந்துகொண்ட இரு இராணுவ வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் குறித்த உறுதியான திகதியைக் குறிப்பிட இயலாது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்க நாட்கள் செல்லும். ஆனால், ஜுன் மாதம் 2 ஆம் திகதியுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனாதிபதியின் வர்த்தமானி காலாவதியாகின்றது. எனவே, இருந்த நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி விரும்பாமையினால் நீதிமன்றமே உரிய தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.