சர்வதேச அமைப்புகளில் இருந்து இலங்கையை விலக்க வேண்டாம்

சர்வதேச அமைப்புகளிலிருந்து விலகுவதென்பது நாட்டை பின்நோக்கியே அழைத்துச் செல்லும். அத்தகைய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி தனது தரப்பு நியாயத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் சபை முதல்வருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இராணுவத்தையும், நாட்டையும் தொடர்ச்சியாக இலக்கு வைக்கும் சர்வதேச அமைப்புகள் அல்லது நிறுவனங்களிலிருந்து வெளியேறுவதற்குத் தயங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சர்வதேச அமைப்பு, நிறுவனங்களின் கொள்கை கோட்பாடுகளை ஏற்று, அதன் சட்டத்திட்டங்களுக்கமையவே இலங்கை உறுப்புரிமை பெற்றிருக்கின்றது. மாறாக அத்தகைய அமைப்புகளில் வெறுமனே இணையமுடியாது. எனவே, சட்டதிட்டங்களை நிச்சயம் பிற்பற்றவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில்கூட இலங்கை அங்கம் வகிக்கின்றது. இந்தநிலையில் அழுத்தங்கள் தொடர்ந்தால் சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகக்கூட பின்நிற்கப்போவதில்லை என்று அறிவிப்பு விடுப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.

அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சர்வதேச அமைப்பொன்று குற்றச்சாட்டு முன்வைக்கும்பட்சத்தில் உரிய விளக்கத்தை வழங்கி தமது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது நாம் இதனைச் செய்தோம்.

சர்வதேச ஒத்துழைப்பின்றி எம்மால் செயற்படமுடியாது. அவ்வாறு செயற்பட்டால் நாடு தனிமைப்படுத்தப்படும் அபாயம் உருவாகும். அதன்மூலம் நாடு பின்நோக்கியே பயணிக்க வேண்டிவரும்” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir