“தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர்களது செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமானவை; சந்தேகத்துக்குரியவை.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
தற்போது பொதுத்தேர்தலை நடத்துவது குறித்தே மக்கள் அவதானம் செலுத்துகின்றார்கள். இதற்கன நடவடிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழு முறையாக முன்னெடுக்க வேண்டும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குள் முரண்பாடுகள் தீவிரமடைந்ததுள்ளன. சுயாதீன ஆணைக்குவின் உறுப்பினர்களது செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமாகக் காணப்படுவதுடன், சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவும் உள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குவின் உறுப்பினர்கள் மாத்திரமே ஆணைக்குழுவின் வரப்பிரசாதங்களைப் பயன்படுத்த முடியும் தவிர அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ரட்னஜீவன் ஹூலுக்கு எதிராக ஏன் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.
பொதுத்தேர்தலின் ஊடாக பலமான அரசு தோற்றம் பெற வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
தேர்தல்கள் ஆணைக்குழு தற்போதைய நிலையில் சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய தீர்மானங்களை எடுப்பதே சிறந்ததாகும்” – என்றார்.