மலையென நிமிர்ந்து நின்ற மலையக தலைவருக்கு எமது அஞ்சலி ; டக்ளஸ்

மலையக தமிழ் மக்களும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களும் இரு வேறு இனங்களல்ல. தமக்கே உரித்தான தனித்துவமான பண்பாடுகளை அவர்கள் கொண்டிருந்தாலும் நாமும் அவர்களும் பேசும் மொழியாலும், இனம் என்ற உணர்வாலும் ஒன்றானவர்கள்

மலையக மக்களின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களை நாம் நெஞ்சில் நினைவேந்தி அஞ்சலி மரியாதை செலுத்துகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் – மலையக மக்களை நாமும் எமது ஆழ்மனங்களின் அன்புடன் நேசித்தவர்கள் என்பதை, எமது ஆரம்பகால நீதியான உரிமைப்போராட்டத்திலும் திம்பு பேச்சு வார்த்தை மேசையிலும் நிரூபித்து காட்டியவர்கள் என்பதையும் நினைவு படுத்துகிறோம்.

அந்த மலையக மக்களின் தலைவரின் பேரிழப்பு எமக்கு பேரதிர்ச்சியை தந்திருக்கிறது, தனிப்பெரும் தலைவரான செளவிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் இழப்பின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் என்ற பேரியக்கத்தை தலைமையை ஏற்று நடந்த தலைவனின் இழப்பு ஆழ்ந்த துயரங்களை எமக்கு தந்திருக்கிறது.

வெறுமனே உணர்ச்சிப்பேச்சின் அரசியலுக்குள் தன்னை உட்படுத்தாமல் அரசுடன் பேசுதல்,. போராடுதல்,. பெறுதல் என்ற யதார்த்த அரசியல் வழி நின்று தன்னால் முடிந்தளவு உரிமைகளை மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுத்தவர் அவர். அதனால் மலையகத்தில் பன்முக அரசியல் ஜனநாயக ரீதியில் தோன்றிய மாற்று கட்சிகளாலும் நேசிக்கப்படுகின்ற ஒருவராக அவர் திகழ்கின்றார்.

மலையக மக்களின் மனங்களின் சிம்மாசனமிட்டு வீற்றிருந்த அவர் இன்று எம்மை விட்டு நீங்கி விட்டாலும் அவர் எண்ணியும் இன்னமும் நிறைவேறாத அவரது கனவுகளை அவரது இடத்தில் இனி இருப்பவர்கள் மட்டுமன்றி, சக மலையக மக்களின் கட்சிகளும் ஒன்று பட்டு நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

மலையக தமிழ் மக்களின் வாழ்வில் வாசலில் விடியலின் ஒளி முழுமையாக தோன்றவில்லை. அதை சாத்தியமாக்குவதே தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும் அதற்காக நாமும் குரலெழுப்புவோம். அதை சாத்தியமாக்க நாமும் சேர்ந்துழைப்போம். தலைவனின் இழப்பால் கனத்த இதயத்துடிப்புடன் துயரில் ஆழ்ந்திருக்கும் மலையக தமிழ் மக்களின் துயரில் நாமும் பங்கெடுகின்றோம். ஒரு வரலாற்று அரசியல் தலைவராக, மாபெரும் தொழிற்சங்கமொன்றின் வழிகாட்டியாக,.. எமது அரசியல் நண்பராக, மறைந்து போன ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும் எமது கட்சியின் சார்பாகவும் அஞ்சலி மரியாதை என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir