இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 150 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,469 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றிரவு 11.55 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் ஆகக் கூடுதலாக 137 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கையைக் கடந்து நேற்று ஒரே நாளில் 150 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடற்படையினரும், வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுமே நேற்று கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 1,469 பேரில் தற்போது 727 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
732 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். அத்துடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மேலும் 75 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.