ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் உறுப்பினர்களுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரமே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட வேண்டியதுள்ளது. 70 நாட்கள் அவசியம் என்பதையும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றதுக்கு அறிவித்துள்ளது.
எனவே, ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே நாம் தற்போது செயற்பட வேண்டும்.
தேர்தல்கள் ஆணைக்குழுவைப் பாதுகாத்தால் மாத்திரமே நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். தேர்தல்கள் ஆணைக்குழுவை தற்போது விமர்சிப்பவர்கள் எதிர்க்கட்சிக்குச் சென்ற பின்னர் அதன் தேவையை உணர்வார்கள்.
எனவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழு மக்கள் குறித்து சிந்தித்தே செயற்பட வேண்டும். அதேபோன்று மக்களின் உரிமைகளுக்காக நாம் எப்போதும் முன்னிற்க வேண்டும்.
அரசியல் கட்சி என்ற வகையில் தற்போது நாம் தேர்தல்கள் ஆணைக்குழுவைப் பாதுகாக்க வேண்டும். ஆணைக்குழுவை இல்லாதொழிக்கும் வகையிலேயே தற்போது செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
ஏனெனில் 17ஆவது அரசமைப்பு திருத்தத்தின் ஊடாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டாலும் அதிகாரக் கட்டமைபொன்று காணப்பட வில்லை. ஆனால், 19 ஆவது அரசமைப்பின் ஊடாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவும் வலுப்பெற்றது எனவும் அவரை குறிப்பிட்டுள்ளார் .