நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் 38 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 66 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.