தலிபான்களுடனான அமைதி ஒப்பந்தத்தின் கீழ், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை 8,600ஆக குறைக்க தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜோனத்தான் ஹோப்மேன் கூறுகையில்,
“தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஜூலை மாதத்தில் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை 8,600ஆக குறைக்க உள்ளோம். மேலும் ஒப்பந்தத்தின் முக்கிய சரத்து ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகளை மீளப்பெறுவது தான்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்து, நேட்டோ கூட்டணி நாடுகளின் ஒத்துழைப்புடன் ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் படை குறைப்பு செய்வது குறித்து முடிவு செய்யப்படும்” என கூறினார்.
கடந்த பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி, கட்டார் தலைநகர் டோஹாவில் 2001ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெற்று வரும் மிக நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு இரு தரப்புகளுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த 18 ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப் பிரிவுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும். இதனடிப்படையிலேயே படை குறைப்பு செய்வது குறித்து அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
கடந்த 18 ஆண்டுகால போருக்காக இதுவரை அமெரிக்கா ஒரு இலட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டொலரைச் செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.