“நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னமும் மூன்று மாதங்கள் செல்லும் என நான் நினைக்கின்றேன். ஏனெனில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கருத்துக்களைப் பார்க்கும்போது இவ்வாறு எண்ணத் தோன்றுகின்றது.”
– இப்படிக் கவலையுடன் தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்து 9 தொடக்கம் 11 வாரங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். அப்படியாயின் எப்படியோ இன்னும் மூன்று மாதங்களுக்குத் தேர்தல் இழுபடப் போகின்றது.
ஏற்கனவே மூன்று மாதங்கள் இழுபட்டதால் மொத்தமாக 6 மாதங்கள் நாட்டின் பணிகள் தடைப்பட்டுக் கிடக்கும் நிலைமை உருவாகியுள்ளது” – என்றார்.
“கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் விடயத்தில் எதிரணியினர் குற்றஞ்சாட்டுவது போன்று எந்தவித அரசியல் தலையீடுகளும் இல்லை. சில அதிகாரிகளே ஒத்துழைப்பை வழங்க மறுக்கின்றார்கள்” – என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் கூறினார்.