ஆயுதப் போராட்டம் தோற்றுப்போக அனுமதிக்க வேண்டாம் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம், இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியிருந்தது. ஆயுதப் போராட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்க்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை, சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது.
ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் சர்ச்சை தொடர்பிலும் கூட்டத்தில் பேசப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆயுதப் போராட்டத்தை எதிர்க்கவில்லை. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம், ஆயுதப் போராட்டம் தோற்பதற்கு விட வேண்டாம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.