கொரோனா தொற்று பரவல் காரணமாக நிதிச் சுமையில் சிக்கியுள்ள 225 பாடசாலைகளைச் சேர்ந்த கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட்டினால் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரால் 132 பயிற்சியாளர்களுக்கு தலா 20,000 ரூபா வழங்கி வைக்கப்பட்டதாக, ஶ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் குறித்த நிதியுதவியினைப் பெற்றுக்கொள்ளாத மீதமுள்ள பயிற்சியாளர்களுக்கு உரிய நேரத்தில் மானியம் வழங்கப்படும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்நிகழ்வில் பல பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்களும் மைதானப் பராமரிப்பு இயந்திர உபகரணங்களும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தெரிவுசெய்யப்பட்ட 24 பாசாலைகளுக்கு இயந்திர உருளைகளும், 16 பாடசாலைகளுக்கு புல்வெளி மூவர் மற்றும் கை டிராக்டர்கள் வழங்கப்பட்டன.
இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து குறித்த உதவிகள் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.