சமகாலத்தில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை மீனவர்களினால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளமையினால் இலங்கை மீனவ கிராமங்களின் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இருந்து மன்னார் வரையிலான கடற்பகுதியில் படகு மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகள் காரணமாக இந்திய பெருங்கடல் ஊடாக கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்திற்குள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் கடல் நடுவில், மீன் பரிமாற்றம், கஞ்சா, ஹெரோயின் உட்பட சட்டவிரோத பொருட்களை பரிமாறிக் கொள்வதனால் அவர்களுக்கு இடையில் கொரோனா பரவல் கூடும் என அவர் கூறியுள்ளார்.
இதனால் கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.