மட்டக்களப்பு- சந்திவெளி மற்றும் திஹிலிவெட்டை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற கோஷ்டி மோதல்களில் நான்கு பேர் வாள் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் எட்டுப்பேர் தேடப்பட்டு வருவதாக ஏறாவூர்ப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
கடந்த மூன்று நாட்களாக இக் கோஷ்டி மோதல் இடம்பெற்று வந்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற ஆலய உற்சவத்தின் போது பெண்களுடன் ஒரு குழுவினர் சேட்டையில் ஈடுபட்ட வேளையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கோஷ்டி மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சட்டவிரோத மரக்கடத்தலைத் தடுக்க முற்பட்டதில் வார்த்தர்க்கம் ஆரம்பமானதாகவும் கூறப்படுகிறது.
சந்திவெளி பிரதேச குழுவினர் திஹிலிவெட்டை பகுதிக்குச் சென்று சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து திஹிலிவெட்டை பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் சந்திவெளி பகுதிக்கு வந்து மோதலில் ஈடுபட்டதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கோஷ்டி மோதலின் போது குறித்த பிரதேசங்களில் அல்லோல கல்லோல நிலை காணப்பட்டதாக அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இக் கோஷ்டி மோதலை சிலர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலாக சித்தரிக்க முனைவதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.