அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வடக்கில் விடுமுறைக்காகச் சென்ற இரண்டு இலங்கையர்கள் கிரிஸ்டல் கஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சிச் சுழியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 59 வயதுத் தந்தையும் 21 வயதுடைய மகனுமென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும், குயின்ஸ்லாந்தில் விடுமுறையில் இருந்தபோது, சுற்றுலாப் பயணிகளுடன் கிரிஸ்டல் கஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றனர்.
கெய்ர்ன்ஸில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தளமான குறித்த நீர்வீழ்ச்சியானது, வழுக்கும் பாறைகள் மற்றும் வலுவான நீரோட்டங்களுக்குப் பெயர் பெற்றதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த தந்தை முதலில் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது, அவரது மகனும் மகளும் அவரை மீட்க முயன்ற தருணத்தில், மூவரும் நீரோட்டத்தில் சிக்கினர்.
மூவரும் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் தவிப்பதாகத் தகவல் கிடைத்ததும், அவசரச் சேவையாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆயினும், மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் தந்தையும் மகனும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து விளக்கமளித்த குயின்ஸ்லாந்துப் பொலிஸார், மரணத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எவையும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
T01