சூடானில் ஆயுதம் ஏந்திய அணிகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சூடான் முழுவதும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வரிசையில், இராணுவத்துக்கும் துணை இராணுவக் குழுவுக்கும் (ஆர்.எஸ்.எஃப்) இடையே மூன்றாவது நாளாக மோதல் இடம்பெற்றுவருகின்றது.
குறித்த மோதலில், ஏறக்குறைய 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சூடானிய மருத்துவர் சங்கம் கூறியுள்ளது. மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,100 எனவும் ஒரு மதிப்பீடு கூறுகின்றது.
இரு தரப்பினரும் தலைநகர் கார்ட்டூமில் உள்ள முக்கியமான தளங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். குறித்த பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள் வெடிப்புச் சம்பவங்களில் இருந்து தப்பிப்பதற்காக இராணுவத்தினரிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினர் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்காக தற்காலிகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டனர்.
கார்ட்டூமில் உள்ள மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், மோதலின் காரணமாக மருத்துவ உதவிகளும் மருந்துப் பொருள்களும் காயமடைந்தவர்களைச் சென்றடைவது தடுக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
குறித்த மோதலானது, நாட்டின் இராணுவத் தலைமைகளுக்குள் உள்ள அதிகாரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் காணப்படுவதோடு, அதிகாரப் போட்டியின் விளைவால் இரு இராணுவப் பிரிவினருக்குமிடையே அண்மைய நாட்களில் வன்முறை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
T01