அல்-கொய்தா மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) கயாரா குழுவைச் சேர்ந்த பயங்கரவாதி என அடையாளப்படுத்தப்படும் இக்பால் என்ற பாலி கயாராவை தேரா இஸ்மாயில் கானில் உள்ள ஃபதே மூர் அருகே பொலிஸார் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவராக இருந்த இக்பாலைப் பிடித்தால் 10.5 மில்லியன் ரூபா வெகுமதியென பஞ்சாப் காவல்துறை அறிவித்திருந்தது.
இக்பால் குழு காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு காவல்துறை பதிலடி கொடுத்தபோதே இக்பாலையும் கூட்டாளியையும் கொன்றதாக ஜெனரல் அக்தர் ஹயாத் கான் என்ற அதிகாரி கூறினார்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் தகவல் தெரிவிக்கும்போதே ஜெனரல் அக்தர் ஹயாத் கான் இதனை உறுதிப்படுத்தினார்.
இக்பால் 26 பயங்கரவாத வழக்குகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலை வழக்குகளுக்காக தேடப்பட்டவர் என்று அவர் கூறினார். கொலைகள், பயங்கரவாதம் மற்றும் ஸியா முஸ்லிம்களைக் கடத்தியதாகவும் அந்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் மேலும் ஐந்து வழக்குகளிலும் முல்தான் காவல்துறையினராலும் இக்பால் தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சமீபத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் 2009 இல் லாகூரில் இலங்கைக் கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் ஆகியவற்றிலும் இக்பால் ஈடுபட்டிருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலில் 7 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, அஜந்த மெண்டிஸ், திலான் சமரவீர, தரங்க பரணவிதான மற்றும் சமிந்த வாஸ் உட்பட ஏழு வீரர்கள் காயமடைந்துமிருந்தனர்.
இந்தத் தாக்குதல் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் கிரிக்கெட் மற்றும் பிற சர்வதேச விளையாட்டுக்களை நடத்தவிடாமல் செய்திருந்த நிலையில் பாகிஸ்தானில் பாதுகாப்பு கணிசமாக மேம்பட்ட பின்னரே மீண்டும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
T02