சிசு சரிய பாடசாலை பஸ் சேவைக்கான மொத்த செலவையும் அரசாங்கத்தால் ஏற்க முடியாது எனப் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் குணவர்தன, அரசாங்கமானது குறிப்பிட்டளவு கட்டணத்தை பெற்றோரிடமிருந்து அறவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, சிசு சரிய பாடசாலை பஸ் சேவைக்கான செலவில் 70 சதவீதம் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் மீதி 30 சதவீதம் பெற்றோரிடமிருந்து அறவிடப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர், குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு இலவசமாகச் சேவையை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அரசாங்கத்தினால் பெற்றோர்களிடமிருந்து குறைந்தபட்சமாக 30 சதவீத செலவைப் பெற முடியாவிட்டால், சிசு சரிய பாடசாலைப் பேருந்து சேவையை நிறுத்த வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
T01