மெக்சிக்கோவின் குவாடலஜாராவின் மேற்கு நகருக்கு வெளியே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் மனித எச்சங்கள் அடங்கிய 45 பொதிகளை மெக்சிகோ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த வாரம் காணாமல் போனதாகக் கூறப்பட்ட அழைப்பு மையத்தின் பணியாளர்கள் ஏழுபேரை தேடிக்கொண்டிருந்தபோதே, குறித்த மனித எச்சங்கள் அடங்கிய பொதிகள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.
கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களில் ஆண்களும் பெண்களும் அடங்குவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடினமான நிலப்பரப்பு மற்றும் குறைந்த வெளிச்சம் காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் பல நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழு பேரைத் தேடித்தருமாறு கிடைக்கப்பெற்ற ஓர் இரகசிய தகவலைத் தொடர்ந்தே, குறித்த தேடுதல் பணியானது, மிராடோர் டெல் போஸ்க் பள்ளத்தாக்கில் தொடங்கப்பட்டதாகவும், அங்கு அவர்களின் உடல் பாகங்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மெக்சிக்கொவின் மேற்கு மாநிலமான ஜலிஸ்கோவிற்கான அரசு வழக்கறிஞர் அலுவலகமானது ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமானப்பாடையினர் ஆகியோர் குறித்த மனித எச்சங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட குறித்த பணியானது, கடினமான நிலப்பரப்பு மற்றும் சூரிய ஒளி இல்லாமை காரணமாகத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பிலும், அவர்கள் யார்? என்பது தொடர்பிலும், இறப்புக்கான காரணங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காணாமல் போனதாகக் கூறப்படும் ஏழு பேர் குறித்த விடயங்களைக் கண்டறியத் தொடர்ந்தும் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையானது “மிகப்பெரிய மனித சோகம்” என இதனை அழைக்கின்றது.
T01