தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தனது முகப்பத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது ஸ்ரீலங்கா அரச புனாய்வுப்பிரிவினைச் சேந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றதோடு, மற்றுமொரு நபர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்துவதற்கு இலக்குவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மருதங்கேணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மருதங்கேணியில் உள்ள விளையாட்டுக்கழகமொன்றின் இளைஞர்களுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்காகச் கஜேந்திரகுமார் சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இளைஞர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது சிவில் உடையில் இனம் தெரியாத நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் குறித்த இடத்திற்கு சென்றதோடு, கலந்துரையாடலை தொலைபேசி மூலம் ஒளிப்பதிவு செய்வதற்கு முயற்சித்துள்ளனர்.
அதன் போது, கஜேந்திரகுமாரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களிடத்தில் விபரங்களை கோர முற்பட்டபோது அவர்கள் தகவல்களை வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஒருவர் கஜேந்திகுமாரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
மற்றவரை அங்கிருந்த இளைஞர்கள் மடக்கிப்பிடித்த நிலையில், குறித்த நபர் தொடர்ந்து பொலிஸாருடன் தொலைபேசியில் உரையாடினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போதே அவ்விடத்திற்கு வந்த மேலும் ஒருவர் கஜேந்திரகுமாரை நோக்கி துப்பாக்கியை காண்பித்து பிடித்து வைத்துள்ள நபரை உடனடியாக விடுக்குமாறு தெரிவித்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.