இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்குக் காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மக்களைப் பயப்பட வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர், இலங்கை மத்திய வங்கி (CBSL) நிலைமையை சரிப்படுத்துவதற்கு பாடுபடும் என உறுதியளித்தார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், கொள்வனவு விலை 311.60 ரூபாவாகவும், விற்பனை விலை 328.92 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
இதற்கிடையில், இன்று காலை உரிமம் பெற்ற வணிக வங்கிகளில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை உயர்ந்து 335.00 ரூபாவாகவும், கொள்வனவு விலை 315.00 காணப்பட்டது.
இது தொடர்பில் மேலும் பேசிய ரஞ்சித் சியம்பலாபிட்டிய, வழங்கல் மற்றும் தேவையின் அடிப்படையில் மாற்று விகிதங்கள் தீர்மானிக்கப்படுவதாக விளக்கினார்.
இது தொடர்பில் கவலை கொள்ளத்தேவையில்லை எனத் தெரிவித்த அவர், இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வாங்கியுள்ளது எனவும், அதனால்தான் மாற்று விகிதங்கள் அவற்றின் தற்போதைய நிலையில் உள்ளன எனவும், இல்லையெனில் அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் உயர்ந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.