உக்ரைனின் இணைய பாதுகாப்பு திட்டத்தை ஆதரிக்கும் விதமாக 16 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா ஒதுக்கியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் முதல்முறையாக உக்ரைனிய படைகள் எதிர்ப்பு தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இந்த எதிர்ப்பு தாக்குதலில் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களையே உக்ரைனிய வீரர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன்மூலம் உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள போர் முன்வரிசையில் உக்ரைனிய வீரர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.
ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அனைத்து வகையிலும் பிரித்தானியா உறுதுணையாக நின்று வருகிறது.
நிதி உதவி, ஆயுத உதவி, வீரர்களுக்கான பயிற்சி என அனைத்து பிரிவிலும் உக்ரைனுக்கு பிரித்தானியா பக்கபலமாக நின்று வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் இணைய பாதுகாப்பு திட்டத்தை (cybersecurity) ஆதரவளிக்கும் விதமாக பிரித்தானியா 16 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது.
இந்த உதவி ரஷ்ய தாக்குதலில் இருந்து உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளை பாதுகாக்க கீவ்விற்கு துணையாக இருக்கும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் கூற்றுப்படி, வங்கி சேவை முதல் எரிசக்தி விநியோகம் வரையிலான உக்ரைனின் முக்கிய சேவை கட்டமைப்புகளை பாதுகாக்க உதவும் என தெரிவித்துள்ளார்.
அதே சமயம் பிற கூட்டாளிகளிடம் இருந்து உக்ரைன் கூடுதலாக 9 மில்லியன் பவுண்டுகளை பெறலாம் என ரொய்ட்டர்ஸ் அறிக்கைத் தகவல் தெரிவித்துள்ளது.