வாழ்வு தேடி அலையும் மக்களுக்கான நாள் உலக அகதி தினம்!

உலக அகதி தினம் ஆண்டுதோறும் ஜூன் 20 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, ஜூன் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல் கடைப்பிடிக்கப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 

பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக, தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிற நாடுகளிலும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.

இன்றைய நாள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்படும். 

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானிக்கிறது.

“எல்லாச் செயலும் கணக்கிடப்படுகிறது. எல்லோருடைய உயிரும் மதிப்புமிக்கவை” என்பதே ஐ.நா.வின் அகதிகள் தினத்தின் பிரகடனம்.

இந்த அகதிகள் தினத்தின் ஓர் சாட்சியமாக,

கடந்த காலங்களில் இடம்பெற்ற சிரிய உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்கும் நோக்குடன் பலர் ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்காக ரப்பர் படகு ஒன்றில் பயணித்தபோது, படகு விபத்திற்குள்ளானதையடுத்து, கடலில் மூழ்கி பல நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியிருந்தனர்.

அவ்வாறு பலியானவர்களில் 3 வயது குழந்தையின் உடல் ஒன்று 2015 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி கரை ஒதுக்கியது. 

உடல் கவிழ்ந்த நிலையில், கடல் அலை கரையொதுக்கியிருந்தது. அந்த பரிதாப காட்சி உலக வல்லரசுகளைக் கூட கலங்கடித்தது என்றே கூறவேண்டும்.

அந்த ஒற்றைப் புகைப்படமே அகதிகள் குறித்த துன்பத்தின் கொடூரமான சாட்சியாக அமைந்திருந்தது.

சொந்த நாட்டைவிட்டு, இருக்கும் சிறிய சேமிப்பையும் இருப்பிடத்தையும் விட்டு, ஒருவர் வேறு நாட்டிற்குப் பயணிக்கிறார் என்றால் அவரின் கையறுநிலையை உணர்ந்து கொள்ளவேண்டும். 

உயிர் பிழைத்தால் போதும் என்பதைத் தாண்டி அந்தப் பயணத்தின் இலட்சியம் வேறொன்றும் இல்லை.

உலகில் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறு நாட்டில் தஞ்சமடைய செல்கின்றனர்.

2011ஆம் ஆண்டு கணக்கின் படி, உலகளவில் 1 கோடியே 52 லட்சம் பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என, யூ.என்.எச்.ஆர்.சி ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, 2020 ஆம் ஆண்டு ஆய்வில் உலகம் முழுவதும் சுமார் ஏழு கோடியே 80 லட்சம் பேர் அகதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply