துபாயில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் இணைந்தே குறித்த மோசடியை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர்களுக்கெதிராக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊவா மாகாண குடியகல்வு வள நிலையத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து, அவர்களை கைது செய்யவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்ட அதிகாரிகள், குறித்த பெண் மருதானை பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாக கிடைத்த தகவலுக்கு அமைய அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மஹியங்கன பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், அவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரது கணவர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, கைது செய்யப்பட்ட பெண் இன்று மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்மை குறிப்பிடத்தக்கது.