யாழில் இரு நாள் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மீள் பரிசீலனைக்கு கோரிக்கை!

யாழில் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய இரு திங்களில் தனியார் வகுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்று யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாதசுந்தரனுக்கு யாழ். வணிகர் கழகம் அனுப்பி வைத்துள்ளது.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

1) கடந்த போர் காரணமாக தமிழ் மக்களினுடைய கல்வித்தரம் வெகுவாகக் குறைந்துள்ளது. அதாவது இலங்கையில் மாகாண அடிப்படையில் எமது மாகாணம் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 8அல்லது 9ஆவது நிலையில் உள்ளது. அதனை ஈடு செய்ய வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

2) கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட முடக்கநிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பாடசாலைகளில் பாடத்திட்டம் (Syllabus) முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. அத்துடன் வழமையாக நடைபெறும் பரீட்சைகளும் பின் தள்ளப்பட்டுச்செல்கிறது. மேலும், கூடுதலாக தனியார் கல்வி நிலையங்களிலே இப்பாடத்திட்டங்கள் (Syllabus) முடிந்தளவு கவனத்தில் எடுத்து கற்பிக்கப்படுகின்றது.

3) தொழில் நிமித்தம் வேலைக்குச் செல்லும் பெற்றோர் பிள்ளைகளின் கல்விக்காக சனி, ஞாயிறு தினங்களையே தனியார் கல்வி நிலையங்களுக்கு கூட்டிச்செல்வது பொருத்தமாக அமையுமென கருதுகின்றனர்.

4) வெள்ளி, ஞாயிறு தினங்களில் மதவழிபாடு, அறநெறி கற்றல் என்பது கட்டாயமாக்கப்பட்டதாக காணப்படவில்லை, மாணவர்கள் மதவழிபாடு, அறநெறிக்குச் செல்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

5) மேலும் இந்த தடைவிதிக்கப்பட்ட காலங்களில் இடைவிலகிய மாணவர்களுடன் இவர்களும் இணைந்து பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அத்துடன் சமூக சீர்கேடுகளில் இவர்கள் விடுமுறை நாட்களில் சமூகத்தில் இருக்கும் சில இணையும் வாய்ப்புக்கள் அதிகம் ஏற்படலாம்.

(6) ஏழை, நடுத்தர மாணவர்கள் பயன்பெறும் தனியார் பயிற்சிக்கல்வி வெள்ளி, ஞாயிறு தினங்களில் தடைசெய்யப்பட்டால் அவர்களுடைய கல்வி பாதிக்கப்படும். அதேவேளை வசதி படைத்த மாணவர்கள் Personal வகுப்புக்களுக்குச் சென்று பயனடைவர்.

7) பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே தனியார் கல்வி நிலையங்களிலும் வகுப்புக்களை நடத்துவதால் அவர்களுக்கு விடுமுறை நாட்கள் வசதியாக அமையும்.

8) இந்த தடைஅமுலுக்கு வருமாக இருந்தால் கல்விச்செயற்பாடுகள் மேலும் பின்னடைவு ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளது. அத்துடன் எமது செயற்பாடுகள் பின்நோக்கிச் செல்வதற்கு நாமே வாய்ப்பினை ஏற்படுத்தியவர்களாக விளங்குவோம்.

9) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை அரச அமைச்சரவையில் அப்போதிருந்த கல்வியமைச்சரால் வெள்ளி, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் தடைசெய்ய வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அமைச்சரவையில் பாரிய எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இந்த விடயம் கைவிடப்பட்டதாக நாம் அறிகிறோம்.

மேலும், இலங்கையில் எந்த மாகாணத்திலும் இப்படியான நடைமுறைகள் இல்லாத போது நாம் மட்டும் இதை ஏற்படுத்தி எமது மாகாணக் கல்விப் பின்னடைவுக்கு – வழிவகுப்பதாக அமையும் என்று நாம் கருதுகிறோம்.

ஆகவே மேற்குறிப்பிட்ட ஒன்பது விடயங்களை தங்கள் கவனத்தில் எடுத்து தாங்கள் மேற்கொண்ட தீர்மானத்தினை மறுபரிசீலனை செய்து கல்விச்செயற்பாடுகளுக்கு எந்த வித தடைகளையும் ஏற்படுத்தாது கல்வி வளர்ச்சிக்கு தாங்கள் பூரண ஆதரவினை வழங்கியுதவுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை தனியார்கல்வி நிலையங்களில், சுகாதார உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளடங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும், மாணவர்களுக்கு சமய சம்பந்தமாகவும், ஒழுக்கக்கல்வி, மற்றும் சமூகம் சம்பந்தமாகவும் 15 நிமிடம் தொடக்கம் 30 நிமிடம் வரை கற்பிக்க வேண்டும் என்று தாங்கள் எடுத்த தீர்மானத்தினை நாம் வரவேற்கின்றோம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply