மகாராஷ்டிரா மாநிலத்தின் அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், மூன்று குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து சமுருத்தி-மஹாமார்க் அதிவேக வீதியில், இன்று அதிகாலை, 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பேருந்து புனே நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் அதில் சுமார் 33 பேர் பயணம் செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பத்தில் மோதி பஸ் கவிழ்ந்து தீப்பிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய பேருந்தின் ஓட்டுநர் கூறுகையில், டயர் வெடித்ததால் பேருந்து மின்கம்பத்தில் மோதியதாக தெரிவித்தார்.
இந்த விபத்தில் 25 பேர் உடல் கருகி பலியாகியதாகவும், பேருந்து ஓட்டுநர் உட்பட காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புல்தானா காவல் கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கவலை தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.