அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் தூண்களின் ஊடாக நிா்மாணிக்கப்படும் துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை மக்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் சீன பொறியியல் மற்றும் நிர்மாண நிறுவன அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை, நிர்மாணப் பணிகளில் இதுவரை 70 வீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குரு கடை சந்தியிலிருந்து கொழும்பு துறைமுகம் ஊடாக துறைமுக நகரம் வரை செல்லும் இந்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் கடந்த 2019 செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டன.
5.3 கிலோமீற்றர் நீளமுடைய இந்த அதிவேக நெடுஞ்சாலை, ஐந்து நுழைவு வீதிகளையும் நான்கு வழி பாதைகளையும் கொண்டுள்ளது.
இதன் நிர்மாண செலவுகள் 360 மில்லியன் அமெரிக்க டொலர்களென மதிப்பிடப்பட்டுள்ளது.
அதில் 300 மில்லியன் டொலர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள தொகை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.