மதுபான கடைகளை வேரோடு பிடுங்க மக்களுடன் இறங்கி போராடுவேன்! வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை

மலையகத்தில் புதிதாக முளைத்து வரும் புதிய மதுபான கடைகளை அமைக்கவிடாது வேரோடு பிடுங்க பாராளுமன்றத்தில் உள்ளேயும், மக்களுடன் வெளியேயும் இறங்கி போராடுவேன் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

” மலையகத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் நகரங்களை இலக்காக கொண்டு இயங்கும் மதுபான கடைகளுக்கு அப்பால் புதிய மதுக்கடைகள் பல உருவாக்க அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் டயகம நகரில் புதிய மதுகடை ஒன்று அமைக்கப்படவுள்ள நிலையில் அதற்கு எதிராக டயகம பிரதேச இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், சமய குருக்கள் உட்பட பொது மக்களும் போராடி வருகின்றனர்.

இது குறித்து இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பிரதேச மக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரதேச மக்களின் கோரிக்கை நியாயமானது.

காரணம் மலையகத்திற்கு இன்று மதுக்கடைகள் முக்கியமல்ல மாறாக பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களில் மாற்றத்தை ஏற்படுத்த கல்வி விருத்திக்கு இடமளிக்க வேண்டும் என்பது எனது இலக்காகும்.

இவ்வாறிருக்க நாட்டில் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மலையக பெருந்தோட்டங்களில் உழைத்து வாழும் எமது உறவுகள் தங்களது குடும்ப வாழ்க்கையை நாளாந்தம் நகர்த்தி செல்ல அரும்பாடு பட்டுவருகின்றனர்.

மறுபக்கத்தில் நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க கடன் சுமை, வரி சுமை, பொருட்கள் விலையேற்றம் என பல சுமைகளை மக்கள் சுமந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மலையகத்தில் உழைக்கும் மக்கள் வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கு செலவுசெய்து மது மயக்கத்திற்கு மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய மது கடைகள் அமைக்க மலையகத்தில் அரங்கேறி வரும் செயலுக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன்.

எனவே புதிய மது கடைகள் மலையக மக்களுக்கு தேவையில்லை என எதிர்த்து நிற்கும் இந்த நியாயமான மக்கள் கோரிக்கையை ஏற்று நான் மக்களோடு இறங்கி போராட தயாராக உள்ளேன் ” எனக் குறிப்பிட்டார்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply