மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார ஊழியர்கள் மூவர் வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹபரலகஹலந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பல மாதங்களாக மின்சார கட்டணம் செலுத்தாமை தொடர்பில் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டதன் காரணமாக தனியார் மின்சார நிறுவன ஊழியர்கள் மூவர் மின்சாரத்தை துண்டிக்க வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து சந்தேக நபர் வீட்டுக்கு வந்துள்ளநிலையில், மூன்று மின்சார ஊழியர்களையும் தாக்கி மீண்டும் வலுக்கட்டாயமாக மின்சாரத்தை எடுக்க முற்பட்டதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான மின்சார ஊழியர்கள் மூவரும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸாருடன் சென்று மின்சாரத்தை துண்டித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.