உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை அடுத்து, சமனலவெவ நீர் மின் நிலையத்தின் செயற்பாடுகள் ஆகஸ்ட் 16 ஆம் திகதியுடன் முற்றாக நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர எச்சரித்துள்ளார்.
இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கஞ்சன, ஆகஸ்ட் 15 முதல் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்காக மின்சாரம் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்று விளக்கினார்.
இது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட அதேவேளை, இவ்வருட முற்பகுதியில் மார்ச் மாதம் இதே கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மின்சாரம் கொள்வனவு செய்வதற்கான கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்படாவிட்டால், மாத்தறை, காலி, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மூன்று மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அமைச்சர் விஜேசேகர எச்சரித்துள்ளார்.
இந்த பகுதிகளில் தினமும் மூன்று மணி நேர மின்வெட்டை, பகலில் ஒரு மணி நேரமாகவும் இரவில் இரண்டு மணி நேரமாகவும் அல்லது ஒரே நேரத்தில் விதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவைக்கு அதிகபட்ச நீரை விடுவிப்பதற்கான விஜேசேகரவின் யோசனைக்கு நேற்று அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியதையடுத்து, சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவை நீர்த்தேக்கத்திற்கு விவசாய தேவைகளுக்காக நீர் விடுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்று ஆரம்பித்துள்ளனர்.
மாநில மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் டி.வி. சானக, மூன்று நாட்களுக்கு ஒரு முறை 3.5 மில்லியன் கனமீற்றர் வீதம் தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.