மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த முறைப்பாட்டில் , அமெரிக்காவில் இருந்து வந்த பொதி ஒன்றினை பெற்றுக்கொள்ள 95 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்துமாறு கோரப்பட்டு மோசடியான முறையில் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் போலியாக நடித்த மோசடிக்கும்பலிடம் மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஒருவர் இவ்வாறு ஏமாந்துள்ளார்.
வெளிநாட்டிலிலுள்ள பெண் ஒருவர் மட்டக்களப்பு பெண்ணுடன் சில காலம் நட்பு ரீதியாக பழகியுள்ள நிலையில் அவருக்கு பெறுமதியான பொதி ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தினை அனுப்புமாறும் கேட்டுள்ளார்.
அதனை நம்பிய இலங்கை பெண் முதற்கட்டமாக 95 ஆயிரம் ரூபா பணத்தினை வெளிநாட்டு பெண் வழங்கிய கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளதை அடுத்து குறித்த வெளிநாட்டு பெண்ணை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இதன் போதே அவர் ஏமாற்றப்பட்டுள்ள விடயத்தை அறிந்துள்ளார்.
இவ்வாறே அண்மைக் காலங்களாக வெளிநாட்டில் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பெட்டியில் வந்துள்ளதாகவும் அதனை விடுவிப்பதற்கு சுங்க அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் எனவும் கூறி ஒரு இலட்சம் தொடக்கம் ஆறு இலட்சம் ரூபா வரை மோசடி கும்பலுக்கு வழங்கி பலரும் பணத்தை அனுப்பி இழந்துள்ளனர்.
இவ்வாறான மோசடி கும்பல் தொடர்பாக விழிப்பாகவும் அவதானமாகவும் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.