அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்று,ஆலையடிவேம்பு,அட் டாளைச்சேனை பிரதேசங்களில் அமைந்துள்ள சம்புக்களப்பு வடிச்சலுக்கு தடையாக நீர்த்தாவரங்கள் நிரம்பி உள்ளதாலும் மற்றும் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றின் வடிச்சலுக்கு தடையாக உள்ளதாலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதுடன், இப்பிரதேசங்களில் முதலைகளின் தொல்லைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இப்பிரதேச விவசாயிகளின் நன்மை கருதியும்,பொதுமக்களின் நன்மை கருதியும் இவ் வடிச்சல் பணிகளை ஆரம்பிக்குமாறு முன்னால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசன அமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை நீர்பாசன அமைச்சர் திரு.ரொசான் றனசிங்கவை நீர்பாசன அமைச்சில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் சம்புக்களப்பு,அட்டாளைச்சேனை கோணாவத்தை வடிச்சலை சீராக்கும் நோக்குடன் நீர்ப்பாசன திணைக்களத்தினால் அக்கறைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்துக்கு வழங்கப்பட்ட எக்ஸ்வேட்டர் இயந்திரம் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில், அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் இப்பிரதேச நீர்பாசன வடிச்சல் பணிகளை ஆரம்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இவ் இயந்திரத்தினை விரைவாக திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இவ்விடயத்தை கேட்டறிந்த நீர்ப்பாசன அமைச்சர் திரு. ரொசான் றனசிங்க சம்புக்களப்பு,கோணாவத்தை ஆற்றினை சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பிக்குமாறு பணிப்பாளர் நாயகத்துக்கு பணிப்புரை வழங்கியதுடன் அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை பிரதேச விவசாய பாதைகளை புனரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
(கே. எ. ஹமீட் )